Enter your Email Address to subscribe to our newsletters

டேராடூன், 04 அக்டோபர் (ஹி.ச.)
உத்தரகண்ட் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 71.58 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். எஸ்.ஐ.ஆர்
நடவடிக்கை தொடங்கியபோது இருந்த வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இறுதிப் பட்டியலில் சுமார் 8 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கியபோது, வாக்காளர் பட்டியலில் 79,60,762 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இதையடுத்து வீடு வீடாக கணக்கெடுப்பு மற்றும் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 71,33,785 வாக்காளர்கள் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர்கள் தங்கள் பெயர் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியது.
ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 13 வரை பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 28 வரை பரிசீலிக்கப்பட்டன.
அதன் பின்னர் அக்டோபர் 3-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இறுதிப் பட்டியலில் 37,37,701 ஆண் வாக்காளர்களும், 34,21,036 பெண் வாக்காளர்களும், 212 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 72,656 வாக்காளர்களும், 80 வயதுக்கு மேற்பட்ட 1,22,892 வாக்காளர்களும் பட்டியலில் உள்ளனர்.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்ட காலகட்டத்தில் 1,29,872 தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், 1,04,708 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் தொடங்கியபோது இருந்த எண்ணிக்கையைவிட இறுதி வாக்காளர் பட்டியலில் 8.01 லட்சம் பேர் குறைந்துள்ளனர்.
இதற்கிடையில், வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் வேறுபட்ட கணக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் தொடங்கிய ஜூன் 8-ஆம் தேதியன்று இருந்த அதிகாரப்பூர்வ வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில், இறுதிப் பட்டியலில் 8.01 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதிப் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியானவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஆன்லைன் செயலியில் படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
Hindusthan Samachar / LOGESHWARI V