Enter your Email Address to subscribe to our newsletters

புரோத்தட்டூர் , 05 அக்டோபர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம்,கடப்பா மாவட்டம் புரோத்தட்டூரில் ரூ.30,156 கோடி மதிப்பிலான ‘அமரஜீவி ஜலதாரா’ குடிநீர் திட்டத்துக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பவன் கல்யாண் அடிக்கல் நாட்டினார்.
இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
போர் வந்தாலும், எல்லை மீறப்பட்டாலும் எனது குரல் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இது அமைதிக்கான நேரம். மக்களுக்கு வளர்ச்சியை வழங்க வேண்டிய காலம்.
எனவே ராயலசீமையின் பவுருஷத்துக்கு ஏற்ற வகையில் பேசாமல், ராயலசீமையின் வளர்ச்சிக்கு தேவையான வகையில் பேசுகிறேன். சண்டைகள், மோதல்கள், கோடாரி வெட்டுகள் வேண்டாம். வளர்ச்சியை இலக்காக கொண்டு முன்னேற வேண்டும்” என்றார்.
ஆந்திர மாநிலம் உருவாக உயிர்த்தியாகம் செய்த அமரஜீவி பொட்டி ஸ்ரீராமுலுவின் பெயரில் இந்த குடிநீர் திட்டம் தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பவன் கல்யாண் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் 24,601 குடியிருப்புகளில் 50,315 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 3.27 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஆட்சி மீது குற்றச்சாட்டு
‘ஹர் கர் ஜல்–ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தை கடந்த ஆட்சி முறையாக செயல்படுத்தவில்லை என்று பவன் கல்யாண் குற்றம்சாட்டினார்.
ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளில் ரூ.2,700 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாகவும், எந்த திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து திட்டத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்ததாகவும், அதன் மூலம் திட்டம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புலிவெந்துலாவிலும் வளர்ச்சி
எங்கள் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் அரசு அல்ல, மக்கள் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்ட அரசு. நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட புலிவெந்துலா தொகுதியில் ரூ.280 கோடி ஒதுக்கி 7 மண்டலங்களில் உள்ள 299 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி. உள்ள அரக்கு, பாடேறு தொகுதிகளிலும் ரூ.2,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்களுக்கு கட்சிகள் முக்கியமல்ல, மக்களின் பிரச்சினைகள்தான் முக்கியம் என்று அவர் கூறினார்.
மேலும், புரோத்தட்டூர் தொகுதியில் உள்ள தாள்ளமாபுரம் கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ரூ.3.5 கோடியில் சிமெண்டு சாலைகள் மற்றும் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பவன் கல்யாண் அறிவித்தார்.
மாநிலத்தில் குடிநீர் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், மக்களுக்கு குடிநீர் வழங்குவது அரசின் பொறுப்பு.
அந்த நீரை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA