கேபிஆர் பூங்காவை சுற்றி நிரந்தரமாகும் ஒருவழிப்பாதை
ஐதராபாத் , 05 அக்டோபர் (ஹி.ச.) ஐதராபாத் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கேபிஆர் பூங்காவை சுற்றி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருவழிப்பாதை போக்குவரத்து முறை நிரந்தரமாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை ஜிஹெச்எம
A


ஐதராபாத் , 05 அக்டோபர் (ஹி.ச.)

ஐதராபாத் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கேபிஆர் பூங்காவை சுற்றி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருவழிப்பாதை போக்குவரத்து முறை நிரந்தரமாக்கப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பை ஜிஹெச்எம்சி கமிஷனர் ஆர்.வி.கர்ணன் வெளியிட்டார்.

கேபிஆர் பூங்கா மற்றும் ஜூப்ளிஹில்ஸ் செக்போஸ்ட் பகுதிகளில் கமிஷனர் ஆர்.வி.கர்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

கேபிஆர் பூங்காவை சுற்றி ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டதுடன், வாகனங்கள் தடையின்றி இடதுபுறம் திரும்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்து, வாகன போக்குவரத்து சீரடைந்துள்ளது. எனவே, தற்போது சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருவழிப்பாதை திட்டத்தை நிரந்தரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்து திட்டத்தின்படி நாகார்ஜுனா சர்க்கிள் முதல் ஜூப்ளிஹில்ஸ் செக்போஸ்ட் வரை 6 வழிச்சாலை கொண்ட புதிய எஃகு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை ஒரு ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேபிஆர் பூங்கா அருகே ஒரு சுரங்கப்பாதையும் அமைக்கப்பட உள்ளது.

ரூ.400 கோடி மிச்சம்

முன்னதாக ‘எச்-சிட்டி’ திட்டத்தின் கீழ் கேபிஆர் பூங்காவை சுற்றி பல மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்க ரூ.1,090 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஒருவழிப்பாதை முறை நல்ல பலனை அளித்துள்ளதுடன், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த திட்டத்தை அதிகாரிகள் மறுஆய்வு செய்தனர்.

இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மிகவும் அவசியமான இடங்களில் மட்டும் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.400 கோடி செலவு மிச்சமாகும். அதே நேரத்தில், கேபிஆர் பூங்கா சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நீண்டகால தீர்வு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA