Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 05 அக்டோபர் (ஹி.ச.)
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மாநிலத்தின் நீரை ‘கிப்ட் பேக்’ செய்து ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி வருவதாக தெலுங்கானா ரக்ஷண சேனா கட்சி தலைவி கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.
ஐதராபாத் பஞ்சாரா ஹில்சில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா,
கிருஷ்ணா நதிநீர் ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் தெலுங்கானாவின் மகபூப்நகர் மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை.
தெலுங்கானா மக்களின் நீரை ஆந்திராவுக்கு வழங்கிவிட்டு, இங்குள்ள விவசாயிகளுக்கு காங்கிரஸ் அரசு அநீதி இழைத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், தெலுங்கானாவில் வறட்சி நிலைமை தீவிரமடைந்துள்ளதால், வறட்சியால் பாதிக்கப்பட்ட மண்டலங்களை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
எல்-நினோ தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் முன்கூட்டியே எச்சரித்தும், காங்கிரஸ் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்கூட வறட்சி மண்டலங்கள் அறிவிக்கப்படாதது, விவசாயிகள் மீது அரசுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றார்.
கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு எந்தவொரு நீர்ப்பாசன திட்டத்திலும் போதிய கவனம் செலுத்தவில்லை.
நார்லாபூர் நீர்த்தேக்க திட்டத்தில் ஓரளவாவது நிதி செலவிட்டு இருந்தால், தற்போது அதை நிரப்பி கல்வகுர்த்தி ஆயக்கட்டுக்கு தண்ணீர் வழங்கியிருக்க முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும்.
கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் தண்ணீர் இருந்தபோதிலும், பாலமூரு-ரங்காரெட்டி உள்ளிட்ட உயர்த்துநீர் பாசன திட்டங்களுக்கு தண்ணீர் வழங்காமல் தெலுங்கானாவின் நீரை ஆந்திராவுக்கு திருப்பி விடுவதாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தற்போது விவசாயிகளுக்கு 6 முதல் 7 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாகவும், இதுகுறித்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விவசாயத்திற்கு மட்டுமின்றி ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாக கவிதா கவலை தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் கட்சி துணை நிற்கும் என்றும், 60 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி பொறுப்பாளர்கள் களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA