Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 அக்டோபர் (ஹி.ச.)
பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
குறிப்பாக, தங்களது பணிக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள “இடைநிலை சுகாதாரப் பணியாளர்” என்ற பதவிப் பெயருக்கு பதிலாக, “சமூக சுகாதார அதிகாரி”
(Community Health Officer) என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணி நியமன ஆணைகளிலும் இதே பதவிப் பெயரை குறிப்பிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனுடன், பிற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று தமிழகத்திலும் தங்களுக்கான ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல்வேறு நிலைகளில் பொதுமக்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்களின் பங்கு முக்கியமானது எனக் கூறும் அவர்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பதையும் அவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் எழும்பூர் பகுதியில் போராட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V