Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 05 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியா - கனடா இடையிலான முன்மொழியப்பட்ட விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் தொடர்பான 5-வது சுற்று பேச்சுவார்த்தை, கனடாவின் ஒட்டாவாவில் இன்று தொடங்குகிறது.
இரு நாடுகளும் இந்த பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி, 2026-ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன.
இன்றிலிருந்து அக்டோபர் 9-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் கனடாவைச் சேர்ந்த தலைமை பேச்சுவார்த்தை குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் அதிகரிப்பதற்கான முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக, 4-வது சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெற்றது. அந்த சுற்று செப்டம்பர் 18-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை விரைவாக முன்னெடுக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.
விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் சுங்க வரிகளை குறைப்பது அல்லது நீக்குவது மட்டுமின்றி, சேவைகள், முதலீடு, திறமையான பணியாளர்களின் நகர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான வர்த்தக ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இந்தியா - கனடா இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்திற்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக முதலீடு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா - கனடா இடையிலான CEPA பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் சில தடங்கல்களை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் பெற்றுள்ளன.
கடந்த 2025-ம் ஆண்டு நவம்பரில் இரு நாடுகளும் முறையான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டன.
தற்போது 5-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கனடா சர்வதேச வர்த்தக அமைச்சர் மானிந்தர் சிது, இந்த மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். அவருடன் சுமார் 300 பேர் கொண்ட வர்த்தக பிரதிநிதிகள் குழுவும் இந்தியா வர உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V