சென்னையில் பைக் ரேஸை தடுக்க 13 தனிப்படைகள்- ஆணையர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு
சென்னை, 06 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதைத் தடுக்க, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. அமல்
Bike


சென்னை, 06 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில் நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதைத் தடுக்க, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவின் பேரில் இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்கள் என மொத்தம் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட உள்ளன.

குறிப்பாக, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முக்கிய சாலைகள், பைக் ரேஸ் நடைபெறக்கூடிய பகுதிகள் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் தனிப்படையினர் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

பதிவு எண் பலகை இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் உள்ளிட்ட விதிமீறல் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னணியாக சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்ற பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகன சாகச சம்பவங்கள் உள்ளன.

குறிப்பாக, கோட்டூர்புரம் பகுதியில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மேம்பாலத் தடுப்புச்சுவரில் மோதியதில், 21 வயதான மெக்கானிக் ஸ்ரீகுகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சென்னையின் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பதிவு எண் பலகை இல்லாமல் இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்களும் வாகனத் தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பைக் ரேஸ், வீலிங் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ள 13 தனிப்படைகள் மூலம், இரவு நேரங்களில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான வாகன ஓட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

Hindusthan Samachar / LOGESHWARI V