பெங்களூருவில் ஜிம் பயிற்சியாளர் அடித்துக் கொலை 4 பேர் கைது
பெங்களூர், 06 அக்டோபர் (ஹி.ச.) யெலஹங்கா பகுதியைச் சேர்ந்த நந்தன், சஹகாரா நகரில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். அந்த ஜிம்மின் ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பிறகு நந்தன் தனது சக பயிற்சியாளர்
Crime


பெங்களூர், 06 அக்டோபர் (ஹி.ச.)

யெலஹங்கா பகுதியைச் சேர்ந்த நந்தன், சஹகாரா நகரில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். அந்த ஜிம்மின் ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நந்தன் தனது சக பயிற்சியாளர்களான விஸ்வநாத், சரத் மற்றும் நிஷாந்த் ஆகியோருடன் கெம்பாபுராவில் உள்ள வாடிக்கையாளர் அனுஷின் குடியிருப்புக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7 மணி முதல் 7.30 மணிக்குள், அங்கு தனிப்பட்ட விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், நந்தன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த நந்தன், ஹெப்பாளில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நந்தனின் சக ஊழியர்களான விஸ்வநாத், சரத், நிஷாந்த் மற்றும் ஜிம் வாடிக்கையாளரான அனுஷ் ஆகிய நான்கு பேரையும் போலீசார் இன்று காவலில் எடுத்துள்ளனர்.

மோதலில் விஸ்வநாத் மற்றும் சரத்துக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட மோதலே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து, சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V