Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 06 அக்டோபர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினம் கோயில்களுக்குச் சென்றுவிட்டு வேனில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.கோட்டூர் விலக்கு பகுதியில், உணவு சாப்பிடுவதற்காக அவர்கள் ஒரு ஹோட்டலில் வேனை நிறுத்தியுள்ளனர்.
அங்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிக்கன் ரைஸ், பரோட்டா, தோசை, ஆம்லெட் உள்ளிட்ட உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். சில உணவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் உணவை சாப்பிடாமல் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த பொருட்களை சிலர் தூக்கி வீசி ஹோட்டலை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது ஹோட்டலில் இருந்த போலீசார் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர் செல்வா மற்றும் ஊழியர்கள் தங்கத்துரை, கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக கம்மாபட்டியைச் சேர்ந்த அர்ஜுன், அஜித்குமார், சுதாகர், ராஜா, பவித்குமார், வெற்றிக்கனி, மணிகண்டன், ரஞ்சித்குமார், கோடீஸ்வரன், பாண்டி, முனீஸ்குமார் ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் 10 பேரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்த நிலையில்., தலைமறைவாக இருந்த கோடீஸ்வரனை தற்போது கைது செய்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V