Enter your Email Address to subscribe to our newsletters


மத்திய பிரதேசம், 06 அக்டோபர் (ஹி.ச.)
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டம் லாஞ்சி அருகே உள்ள கரஞ்சா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலாசாகேப் தேவரஸ் மற்றும் மூத்த பிரச்சாரகரான பாவுராவ் தேவரஸ் ஆகியோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு பவன் மற்றும் பாலாசாகேப் தேவரஸ் நேத்ராலயா ஆகியவற்றை மோகன் பாகவத் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது,
சேவை மற்றும் இரக்கம் ஆகியவை இந்திய மண்ணிலும் நாட்டின் பண்பாட்டு மரபிலும் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றார். பிறருடைய துயரத்தை உணர்ந்து, அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்திய சமூகத்தின் அடிப்படை மதிப்புகளில் ஒன்றாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிறருக்காக தன்னலமின்றி செயல்படுவது இந்திய பண்பாட்டின் முக்கிய அம்சமாகும் என்று கூறிய மோகன் பாகவத், இதற்கு விமானப்படை கேப்டன் ஸ்மித் மச்சார் தொடர்பான சம்பவத்தையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
விமான விபத்து ஏற்பட்ட சூழலில் காயமடைந்த நிலையிலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து செயல்பட்டது தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்தார்.
தனிமனிதர்களின் குணநலன்கள் மற்றும் திறன்களை வளர்ப்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றும் மோகன் பாகவத் கூறினார்.
தாய்நாட்டின் மீது பக்தி, சமூகத்தின் மீதான பொறுப்புணர்வு மற்றும் பிறருக்காக சேவை செய்யும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதில் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட எந்தவித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் தன்னார்வத்துடன் பிறருக்காக சேவை செய்வதே ‘ஸ்வயம்சேவகர்’ என்பவரின் பண்பு என்றும் அவர் விளக்கினார்.
ஆர்.எஸ்.எஸ். தனிநபர்களை உருவாக்குகிறது,பின்னர் அவர்கள் தங்களது பணிகளை சுயமாக மேற்கொள்கிறார்கள். அவர்கள் மேற்கொள்ளும் சேவைப் பணிகளுக்கான பெருமையை அமைப்பு தனக்கென எடுத்துக்கொள்வதில்லை என்றும் கூறினார்.
பாலாசாகேப் தேவரஸ் எளிமையானவராகவும், அனைவருடனும் இயல்பாகப் பழகியவராகவும் இருந்தார் என்று நினைவுகூர்ந்த மோகன் பாகவத், அவர் இந்தியாவின் சேவகராக இருந்தார் என்றார்.
பாலாசாகேப் தேவரஸ் மற்றும் பாவுராவ் தேவரஸ் ஆகிய இரு சகோதரர்களும் தங்களது வாழ்நாள் முழுவதையும் தேசத்துக்கும் சமூகத்துக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கரஞ்சாவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு பவனின் மூலம் தேவரஸ் சகோதரர்களின் வாழ்க்கை, சிந்தனைகள் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து பாதுகாக்க முடியும் என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மேலும், பாலாசாகேப் தேவரஸ் நேத்ராலயா மூலம் கிராமப்புற மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந் நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் துணைத் தலைவர் அரவிந்த் மார்டிகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V