Enter your Email Address to subscribe to our newsletters

காத்மாண்டு, 06 அக்டோபர் (ஹி.ச.)
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான பெருவெள்ளம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த பேரிடரில் இதுவரை 1,455 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் உள்ளிட்ட 5,285 பேர் காணாமல் போனதாக கணக்கிடப்பட்ட நிலையில், மீட்புப் பணிகளின் மூலம் 13,795 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலைநகர் காத்மாண்டுவில் பிரதமர் பலேந்திர ஷா தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தேசியக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் தொடக்கத்தில், பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தேசியக் குழு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பேரிடர் ஏற்பட்ட கடினமான சூழலிலும் மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றிய பாதுகாப்புப் படையினர், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பேரிடர் காலத்தில் நேபாளத்துக்கு தேவையான பல்வேறு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கைகளில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய மறுகட்டமைப்பு பணிகள் குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் கள ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, சேதமடைந்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வீடுகள், அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் சீரமைப்பதே அடுத்தகட்ட பணிகளின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
Hindusthan Samachar / LOGESHWARI V