14 ஆண்டுகளாக ஒரே போனஸ்! தாம்பரம் அருகே ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, 06 அக்டோபர் (ஹி.ச.) தாம்பரம் அடுத்துள்ள ரயில்வே பணிமனை அருகே, 14 ஆண்டுகளாக ஒரே அளவிலான போனஸ் வழங்கப்படுவதாகக் கூறி, ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், அடிப்படை
Protest


சென்னை, 06 அக்டோபர் (ஹி.ச.)

தாம்பரம் அடுத்துள்ள ரயில்வே பணிமனை அருகே, 14 ஆண்டுகளாக ஒரே அளவிலான போனஸ் வழங்கப்படுவதாகக் கூறி, ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், அடிப்படை ஊதியத்தை ரூ.7,000-ல் இருந்து ரூ.28,440 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டி.ஆர்.இ.யு மற்றும் சி.ஐ.டி.யு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ஆடைகளில் பொருத்திக்கொண்டு, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர்.இ.யு பொதுச்செயலாளர் பேபி ஷகிலா தலைமை தாங்கினார். அப்போது, பல ஆண்டுகளாக ஒரே அளவிலான போனஸ் வழங்கப்பட்டு வருவதால், தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் ஊழியர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு போனஸ் தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், ரயில்வே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.7,000-ல் இருந்து ரூ.28,440 ஆக உயர்த்த வேண்டும் என்றும், ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / LOGESHWARI V