இடைத்தேர்தல் 2026 - எந்த தொகுதியில் அதிக வாக்குப்பதிவு?
தமிழ்நாடு, 06 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில், மாலை
Poll


தமிழ்நாடு, 06 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 83.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் 87.84% வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 3.98 சதவீத புள்ளிகள் குறைவாகப் பதிவாகியுள்ளது.

இத்தொகுதியில் த.வெ.க சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தாராபுரம் (தனி) தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.53% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த பொதுத்தேர்தலில் 86.74% வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 8.21 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளன.

இங்கு தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.83% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2026 பொதுத்தேர்தலில் பதிவான 84.33% வாக்குகளுடன் ஒப்பிடுகையில், இடைத்தேர்தலில் 5.5 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளன.

இத்தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேலும், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமாவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இதனால் இரு தொகுதிகளும் காலியானதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அதேபோல், புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி 2026 தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, மங்கலம் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டதால் தட்டாஞ்சாவடியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Hindusthan Samachar / LOGESHWARI V