Enter your Email Address to subscribe to our newsletters

, 07 அக்டோபர் (ஹி.ச.)
நாட்டின் முன்னணி இயற்கை எரிவாயு நிறுவனமான கெய்ல் (இந்தியா) லிமிடெட், தூய்மையான எரிசக்தி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனது ‘வாவ் க்யா எனர்ஜி ஹை’ பிரச்சாரத்தின் 2-வது சீசனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கெய்லின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நான்கு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ‘நயே பாரத் கி நயே எனர்ஜி’ என்ற பிரச்சார கீதமும் வெளியிடப்பட்டுள்ளது.
தூய்மையான மற்றும் நிலையான எரிசக்தி பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சிஎன்ஜி, பிஎன்ஜி, எல்என்ஜி, சிபிஜி உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
நுகர்வோர் தேர்வுகளில் இளம் தலைமுறையின் தாக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஜெனரேஷன் இசட் (Gen Z) மக்களுக்கும் இந்தப் பிரச்சாரத்தில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தூய்மையான எரிசக்தியை நோக்கிய மாற்றத்தில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரச்சாரத்தின் உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சீசன் 2-ல் மிஸ்ரா குடும்பத்தை மையமாகக் கொண்ட பல்வேறு அன்றாட நிகழ்வுகள் கதைகளாக இடம்பெறுகின்றன.
வாரணாசி பயணம், படகு சவாரி, குடும்ப நிகழ்ச்சிகள், உறவினர்களை சந்தித்தல் மற்றும் தொழிற்சாலை சார்ந்த நிகழ்வுகள் என பல்வேறு சூழல்களின் மூலம் தூய்மையான எரிபொருட்களின் பயன்பாடு எவ்வாறு அன்றாட வாழ்க்கையுடன் இணைகிறது என்பது விளக்கப்படுகிறது.
ஒவ்வொரு அத்தியாயமும் எளிமையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தூய்மையான எரிபொருட்களைத் தேர்வு செய்வதன் அவசியத்தை நகைச்சுவை மற்றும் இயல்பான கதை சொல்லல் மூலம் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு படமும் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வரை இடம்பெறுகிறது.
இதனுடன் வெளியிடப்பட்டுள்ள ‘நயே பாரத் கி நயே எனர்ஜி’ கீதம் 4 நிமிடங்களுக்கு மேல் நீளமானதாகும்.
வாரணாசியில் செயல்படுத்தப்பட்டுள்ள மிதக்கும் சிஎன்ஜி நிலையம், சுருக்கப்பட்ட உயிரி எரிவாயு (CBG) உள்ளிட்ட கெய்லின் பல்வேறு எரிசக்தி திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பிரதிபலிக்கும் வகையில் கீதத்தின் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் சிறந்த எரிபொருள் தேர்வுகளை
மேற்கொள்வதன் மூலம் தனிநபர்களின் கார்பன் தடத்தை குறைத்து, நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சாரம் சமூக வலைதளங்கள், டிஜிட்டல் விளம்பரங்கள், வானொலி, திரையரங்குகள், குறும்படங்கள் மற்றும் விளையாட்டு அடிப்படையிலான டிஜிட்டல் செயல்பாடுகள் மூலம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட உள்ளது. பிரச்சார கீதம் Spotify, Amazon Music, Gaana, JioSaavn உள்ளிட்ட முக்கிய இசை தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கெய்ல் நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் ஆயுஷ் குப்தா கூறுகையில், தூய்மையான எரிசக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிப்பதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய எளிமையான கதைகள் மூலம், எதிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த எரிபொருள் தேர்வுகளை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி மூலம் போக்குவரத்து மற்றும் வீட்டு பயன்பாடுகளுக்கும், எல்என்ஜி மற்றும் வணிக, தொழில்துறை பிஎன்ஜி மூலம் தொழில்துறை தேவைகளுக்கும் தூய்மையான எரிசக்தி தீர்வுகளை வழங்குவதில் கெய்லின் பங்களிப்பு குறித்தும் இந்தப் பிரச்சாரம் எடுத்துரைக்கிறது.
பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் ‘கெய்ல் உத்கர்ஷ்’ உள்ளிட்ட நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளும், வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சிஎன்ஜி நிலையங்களும் பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் எரிசக்தி விநியோகத்தைத் தாண்டி சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியிலும் கெய்ல் மேற்கொண்டு வரும் பங்களிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / Durai.J