தெலுங்கானா பா.ஜ.க.வில் முக்கிய பதவி- மத்திய மந்திரி பண்டி சஞ்சய் பரபரப்பு கருத்து
ஐதராபாத் , 07 அக்டோபர் (ஹி.ச.) தெலுங்கானா மாநில பா.ஜ.க.வில் மத்திய இணை மந்திரி பண்டி சஞ்சய்க்கு விரைவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து பண்ட
A


ஐதராபாத் , 07 அக்டோபர் (ஹி.ச.)

தெலுங்கானா மாநில பா.ஜ.க.வில் மத்திய இணை மந்திரி பண்டி சஞ்சய்க்கு விரைவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,

இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பண்டி சஞ்சய் கூறியதாவது:-

பா.ஜ.க. தனக்கு ஏற்கனவே பல்வேறு பதவிகளையும், ஏராளமான வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.

எனவே, பதவிகளுக்காக அலைபவர் நான் அல்ல. கட்சி எனக்கு எந்த பொறுப்பை வழங்கினாலும் அதை தலைவணங்கி ஏற்றுக்கொண்டு செயல்படுவேன். கட்சி தொண்டராக தொடர்ந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொது சேவையை முன்னிட்டு கரீம்நகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய பண்டி சஞ்சய், முன்னாள் முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் தொடர்பான நில விவகாரங்களில் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுவது நாடகம் என்று விமர்சித்தார்.

பி.ஆர்.எஸ். ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் அரசு அறிவித்துள்ள 6 உத்தரவாத திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பி போராடும் வலிமை பி.ஆர்.எஸ். கட்சிக்கு இல்லை என்றும், காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகவும் பண்டி சஞ்சய் குற்றம்சாட்டினார்.

‘ஓட்டு திருட்டு, தொகுதி திருட்டு’

தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருவதற்கும் பண்டி சஞ்சய் பதிலடி கொடுத்தார். ‘ஓட்டு திருட்டு, தொகுதி திருட்டு’ என்பதற்கான காப்புரிமை காங்கிரசுக்கே உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.

1946-ம் ஆண்டு காங்கிரஸ் மாகாண கமிட்டிகள் அனைத்தும் சர்தார் வல்லபாய் படேலை பிரதமராக முன்மொழிந்தபோதிலும், ஜவகர்லால் நேரு பிரதமராக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாட்டில் போலி வாக்குகள் இருப்பதாக காங்கிரசே கூறிய நிலையில், தற்போது அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்போது மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடிக்கு ஓட்டையோ, தொகுதியையோ திருட வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்பம், பினாமி சொத்துகள் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவை அவருக்கு தேவையில்லை என்றும் பண்டி சஞ்சய் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்குடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

‘இளைஞர்கள் ஏமாற வேண்டாம்’

காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் கூறும் கருத்துகளை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என்று பண்டி சஞ்சய் அறிவுறுத்தினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த இந்தியாவையும், தற்போது உள்ள இந்தியாவையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் அமைப்பு என்றும், அது பா.ஜ.க.வின் பாக்கெட் அமைப்பு அல்ல என்றும் தெரிவித்தார். அரசியலமைப்பு அமைப்பை அவதூறாக பேசுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றும் எச்சரித்தார்.

தேர்தல் ஆணையத்தை சந்திக்க ராகுல் காந்தி முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்றும், நூற்றுக்கணக்கானோருடன் சென்று தாக்குதல் நடத்தும் வகையில் செயல்பட்டால் போலீசார் எவ்வாறு தடுக்காமல் இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

தகுதியுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதுடன், தகுதியற்றவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் நோக்கம் என்றும் பண்டி சஞ்சய் விளக்கினார்.

மேலும், தெலுங்கானாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வாக்குகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக மகேஸ்வரம் தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்களின் வாக்குகள் இருப்பதாக பண்டி சஞ்சய் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA