Enter your Email Address to subscribe to our newsletters

அந்தமான், 07 அக்டோபர் (ஹி.ச.)
அந்தமான் நிக்கோபார் கமாண்டின் 25-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, விசாகப்பட்டினத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சவாலான கடல் பயணத்தை இந்திய கடற்படையின் பாய்மரக் கப்பலான INSV Neelkanth வெற்றிகரமாக நிறைவு செய்து ஸ்ரீ விஜயபுரம் வந்தடைந்தது.
இந்தியாவின் முதல் முப்படை ஒருங்கிணைந்த செயல்பாட்டு கமாண்டான அந்தமான் நிக்கோபார் கமாண்டின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வங்கக்கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம், கடற்படை வீரர்களின் கடல் பயணத் திறன், துணிச்சல், விடாமுயற்சி மற்றும் கடல் சூழலைக் கையாளும் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட INSV Neelkanth, சுமார் 700 கடல் மைல் தொலைவைக் கடந்து அக்டோபர் 6-ம் தேதி ஸ்ரீ விஜயபுரம் வந்தடைந்தது. திறந்த கடலில் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டதால், வானிலை மற்றும் கடல் நிலைமைகளை எதிர்கொண்டு பயணத்தைத் தொடர வேண்டிய சவால் குழுவினருக்கு இருந்தது.
ஸ்ரீ விஜயபுரம் அருகே கப்பல் வந்தடைந்தபோது, அந்தமான் நிக்கோபார் கமாண்டின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் வினீத் மெக்கார்ட்டி தலைமையில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘Flag In Ceremony’-யில் பாய்மரப் படகுகள் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படையின் பல்வேறு படகுகள் பங்கேற்றன.
மேலும், இந்திய கடற்படையின் 6 கப்பல்கள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படையின் 2 கப்பல்கள் இணைந்து INSV Neelkanth-க்கு சிறப்பு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுத்து வரவேற்றன. பின்னர் ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள Marina Bay பகுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தக் கடல் பயணம், அந்தமான் நிக்கோபார் கமாண்டின் 25 ஆண்டுகால பயணத்தில் முப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
கடலில் நீண்ட தூரம் பயணம் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவம், வீரர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அந்தமான் நிக்கோபார் கமாண்டின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், INSV Neelkanth-ன் இந்தப் பயணம் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V