உப்பு உற்பத்தி அதிகரிப்பு - நாகை உற்பத்தியாளர்கள் வேதனை!
நாகை, 07 அக்டோபர் (ஹி.ச.) நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் கடும் வெயில் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் கொள்முதல் விலை சரிந்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந
Salt


நாகை, 07 அக்டோபர் (ஹி.ச.)

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் கடும் வெயில் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் கொள்முதல் விலை சரிந்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொழிலில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, ஏராளமான தொழிலாளர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மழைப்பொழிவு குறைந்து, தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் உப்பளங்களில் உற்பத்தி வேகமாக நடைபெற்றது.

இதனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது உப்பு உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் வழக்கமான உற்பத்தி இலக்கை நெருங்கும் அளவுக்கு உப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப விலை கிடைக்காதது உற்பத்தியாளர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டன் உப்பு சுமார் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல இடங்களில் ரூ.600 முதல் ரூ.750 வரை மட்டுமே விலை கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு டன் உப்பை உற்பத்தி செய்வதற்கான செலவே தற்போதைய கொள்முதல் விலைக்கு நெருக்கமாக இருப்பதால், மின்சாரக் கட்டணம், தொழிலாளர் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை சமாளிப்பது கடினமாகி இருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், சந்தையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை உடனடியாக விற்பனை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல உற்பத்தியாளர்கள் உப்பை குவித்து வைத்து, எதிர்காலத்தில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

விலை தொடர்ந்து குறைந்த நிலையில் நீடித்தால் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், உரிய கொள்முதல் விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உற்பத்தி அதிகரித்தும் வருவாய் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பது வேதாரண்யம் பகுதி உப்பு உற்பத்தியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V