25 ஆண்டுகால அரசுப் பயணம் - விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
புதுடெல்லி, 07 அக்டோபர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி அரசு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயக மந்திரில் புதன்கிழமை காலை வழிபாடு மேற்கொண்டார். குஜராத் மாநில முதலமைச்சராக ந
Pm modi


புதுடெல்லி, 07 அக்டோபர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி அரசு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயக மந்திரில் புதன்கிழமை காலை வழிபாடு மேற்கொண்டார்.

குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பதவியேற்றார்.

இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் அவரது பயணம் தொடங்கியது.

குஜராத் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்த அவர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்து பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து பிரதமராக இருந்து வருகிறார். இதன் மூலம் அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

இந்த முக்கியமான நாளை முன்னிட்டு, டெல்லி சரோஜினி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு விநாயகரை தரிசனம் செய்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் பங்கேற்றார்.

விநாயகர் வழிபாட்டுக்குப் பின்னர், நாடு முழுவதும் உள்ள மக்களின் நலன், மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்ததாக பிரதமர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், விநாயகர் விக்னஹர்த்தா எனப்படும் தடைகளை நீக்குபவர் என்பதால், அவரது அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும், இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடி அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.

2001-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக தொடங்கிய அவரது அரசியல் நிர்வாகப் பயணம், தற்போது இந்திய பிரதமர் பதவி வரை தொடர்வதை அந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டியது.

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால அரசு நிர்வாகப் பயணத்தை முன்னிட்டு பாஜக தரப்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விநாயகர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டதன் மூலம் இந்த முக்கிய அரசியல் மைல்கல்லை பிரதமர் தொடங்கியுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V