Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 07 அக்டோபர் (ஹி.ச.)
தென் மண்டலத்தில் கொலை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் காவல்துறையின் தீவிர புலனாய்வு மற்றும் தொடர் கண்காணிப்பின் மூலம், செப்டம்பர் மாதத்தில் மட்டும் பல்வேறு முக்கிய வழக்குகளில் தண்டனைத் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2026-ல் தென் மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 17 கொலை வழக்குகள் தண்டனைத் தீர்ப்புடன் முடிவடைந்துள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 5 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்த வழக்குகளில் மொத்தம் 50 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 46 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 கொள்ளை வழக்குகள் மற்றும் 2 பெரும் திருட்டு மற்றும் கன்னக்களவு வழக்குகளில் 6 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
போக்சோ வழக்குகளில் 34 பேருக்கு தண்டனை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான போக்சோ மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகளில் 26 வழக்குகள் தண்டனைத் தீர்ப்புடன் முடிவடைந்துள்ளன. இவ்வழக்குகளில் 34 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனைகளும், 11 பேருக்கு 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கொலை மற்றும் போக்சோ வழக்குகளில் மட்டும் செப்டம்பர் மாதத்தில் 15 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்புகள் காவல்துறையின் நுணுக்கமான புலனாய்வு, அரசு வழக்கறிஞர்களுடன் மேற்கொண்ட ஒருங்கிணைப்பு மற்றும் மாவட்ட அளவில் வழக்குகளின் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2026-ல் 755 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
தென் மண்டலம் முழுவதும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 2026-ம் ஆண்டில் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான நடவடிக்கைகளில்,
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய 6,248 பேருக்கு எதிராக BNSS பிரிவு 126-ன் கீழ் நன்னடத்தைக்கான பிணையம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11,185 வழக்கமான குற்றவாளிகளுக்கு எதிராக BNSS பிரிவு 129-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
955 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக ஜாமீன் ரத்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
19,488 பிணையற்ற கைது வாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
755 வழக்கமான அல்லது கொடுங்குற்றவாளிகள் தமிழ்நாடு குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜாமீன் அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதாக BNS பிரிவு 269-ன் கீழ் 865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளையும் நீதிமன்றங்களில் தொடர்ந்து கண்காணித்ததன் மூலம், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,010 வழக்குகளில் தண்டனைத் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தென் மண்டலத்தில் கொலை வழக்குகள் குறைவு
தென் மண்டலத்தில் 2026-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை 352 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுகளில் முழு ஆண்டில் பதிவான கொலை வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2021-ல் 469, 2022-ல் 526, 2023-ல் 497, 2024-ல் 470, 2025-ல் 471 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன.
வழக்கமான மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீதான தனிப்பட்ட கண்காணிப்பு, தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொடுங்குற்ற சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலும், தவறாக வழிநடத்தும் வகையிலும் உறுதி செய்யப்படாத தகவல்கள் பகிரப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு அல்லது மறுபதிவு செய்வதற்கு முன்பு பொதுமக்கள் உரிய எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V