Enter your Email Address to subscribe to our newsletters

இந்தியா, 08 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 71,593.24 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் குறைந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50, 1.64 சதவீதம் சரிந்து 22,231.80 புள்ளிகளில் முடிவடைந்தது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த நிலையாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களிடையே விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக நிர்ணயித்துள்ள நிலையில், மேலும் வட்டி உயர்வு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 9 வர்த்தக நாட்களில் மட்டும் ரூ.46,990 கோடி அளவுக்கு முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் விற்பனை அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகளும் சரிவை சந்தித்தன. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 104 டாலரைக் கடந்துள்ள நிலையில், இது இந்தியாவின் பணவீக்கம் மற்றும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P