Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 08 அக்டோபர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலத்தில் பயிர்களை காப்பாற்ற ஜூராலா அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான ஹரீஷ் ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கண்முன்னே பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கும்போது அவற்றை காப்பாற்ற தண்ணீர் வழங்க வேண்டும் என்று கேட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வது வெட்கக்கேடானது.
ரேவந்த் ரெட்டி ஆட்சியில் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வதும், அவர்களை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதும் வழக்கமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணா ஆற்றில் நீர்வரத்து இருந்தபோதிலும், அந்த தண்ணீரை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
அரசின் அலட்சியத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற விவசாயிகள் போராடியுள்ளனர்.
ஆனால், அவர்களின் போராட்டத்தை புரிந்துகொள்ளாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“இது மக்கள் ஆட்சி அல்ல; மக்களை துன்புறுத்தும் ஆட்சி. தவறு செய்வது அரசு என்றால், அதற்கான தண்டனையை விவசாயிகள் அனுபவிக்க வேண்டுமா? என்று ஹரீஷ் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வழக்குகள் திரும்பப்பெறப்படாவிட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெலுங்கானா அரசுக்கு ஹரீஷ் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA