UPI மூலம் PF பணம் எடுக்கலாம் - டிசம்பரில் புதிய வசதி
புதுடெல்லி, 08 அக்டோபர் (ஹி.ச.) பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியான PF தொகையை எடுக்கும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், UPI மூலம் பணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஈடுபட்டுள்ளது.
UPI pf


புதுடெல்லி, 08 அக்டோபர் (ஹி.ச.)

பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியான PF தொகையை எடுக்கும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், UPI மூலம் பணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஈடுபட்டுள்ளது.

இதற்கான சோதனை நடவடிக்கைகள் தற்போது வங்கிகளுடன் இணைந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய வசதி டிசம்பர் 2026 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது PF தொகையைப் பெறுவதற்கு EPFO-வின் UAN இணையதளம் உள்ளிட்ட வழிகளில் கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, பணம் உறுப்பினரின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த நடைமுறையில் சில நேரங்களில் ஆவண சரிபார்ப்பு மற்றும் செயலாக்கத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

புதிய UPI வசதி நடைமுறைக்கு வந்தால், EPFO கணக்கு மற்றும் உறுப்பினரின் UPI வசதிக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, PF தொகையை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். இதற்காக UAN அமைப்புடன் UPI கணக்குகளை இணைக்கும் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, தகுதியுள்ள PF தொகையில் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 75 சதவீதம் வரை பணத்தைப் பெற முடியும்.

உறுப்பினரின் ஓய்வுக்கால சேமிப்பு முழுமையாகக் குறைந்து விடாமல் இருக்க, கணக்கில் குறைந்தபட்சமாக 25 சதவீத தொகையை வைத்திருக்கும் நடைமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், EPFO ஏற்கனவே பகுதி PF பணம் பெறுவதற்கான விதிகளை எளிமைப்படுத்தியுள்ளது.

முன்பு பல்வேறு தேவைகளுக்காக தனித்தனி பிரிவுகள் மற்றும் விதிமுறைகள் இருந்த நிலையில், அவை மூன்று முக்கிய பிரிவுகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

தகுதியுள்ள உறுப்பினர்கள் மருத்துவம், கல்வி, திருமணம், வீடு உள்ளிட்ட தேவைகளுக்காக விதிகளுக்கு உட்பட்டு பணத்தைப் பெற முடியும்.

UPI மூலம் PF பணம் பெறும் வசதி அறிமுகமானால், நீண்ட நடைமுறைகள் குறைந்து, அவசரத் தேவைகளுக்கான பணத்தை உறுப்பினர்கள் விரைவாக அணுகுவதற்கு உதவியாக இருக்கும்.

இருப்பினும், டிசம்பரில் முழுமையான அறிமுகம், பரிவர்த்தனை வரம்பு உள்ளிட்ட இறுதி விதிகள் குறித்து EPFO-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே முழுமையான விவரங்கள் உறுதி செய்யப்படும்.

Hindusthan Samachar / LOGESHWARI V