Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 08 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், பெங்களூருவில் மனிதர்கள் நீண்டகாலம் விண்வெளியில் வாழும் சூழலை ஒத்திருக்கும் சிறப்பு வாழ்விட அமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு, விண்வெளி வீரர்களின் பயிற்சி மற்றும் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இஸ்ரோவின் மனித விண்வெளிப் பறப்பு மையமான Human Space Flight Centre (HSFC)-இன் விண்வெளி வீரர் பயிற்சி வளாகத்தில் இந்த வசதி அமைக்கப்பட உள்ளது.
“Human Space Analog System (HSAS)” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையம், நீண்டகால விண்வெளிப் பயணங்களின்போது ஏற்படும் தனிமை, குறைந்த வளங்கள், மூடப்பட்ட சூழல் போன்ற அம்சங்களை பூமியிலேயே உருவாக்கும்.
இந்த வாழ்விடத்தில் விண்வெளி வீரர்களின் உடல்நலம், மனநிலை, குழு ஒருங்கிணைப்பு திறன் மற்றும் பணிச் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், விண்வெளியில் பயன்படுத்தப்படும் கருவிகள், பரிசோதனைகள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளும் சோதனை செய்யப்பட உள்ளன. இந்த மையம் 60 நாட்கள் வரை நீடிக்கும் விண்வெளி பயணங்களை ஒத்த சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
திட்டத்தின்படி, இந்த வாழ்விடத்தில் இரண்டு தளங்கள் கொண்ட முக்கிய பகுதி அமைக்கப்படும். இதில் விண்வெளி வீரர்களுக்கான பணியிடங்கள், உணவு பகுதி, உடற்பயிற்சி வசதிகள், அறிவியல் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இடம்பெறும். டிரெட்மில், சைக்கிள் உடற்பயிற்சி கருவி உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம் பெறும்.
தற்போது இந்திய விண்வெளி வீரர்கள் சில பயிற்சிகளுக்காக வெளிநாடுகளை நம்பியுள்ள நிலையில், இந்த புதிய மையம் உருவானால் நாட்டிலேயே மேம்பட்ட பயிற்சி மற்றும் ஆய்வு வசதிகள் கிடைக்கும்.
குறிப்பாக, ககன்யான் திட்டம் மற்றும் எதிர்கால நீண்டகால மனித விண்வெளி பயணங்களுக்கு இது முக்கிய பங்காற்றும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / LOGESHWARI V