Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 அக்டோபர் (ஹி.ச.)
மண்டியாவில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செலுவராயசாமி, மேகதாது திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், மத்திய நீர்வள ஆணையத்திடம் திட்டம் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2027 மார்ச் மாதத்திற்குள் அணைக்கு அடிக்கல் நாட்ட கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சி கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு தேவையான அனுமதிகள் வழங்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வரத்து குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலில் மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் நீர்வள உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே வைகோவின் அறிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V