திருவாரூரில் வெறிநாய்கள் அட்டகாசம்- 10-க்கும் மேற்பட்டோர் காயம்
திருவாரூர், 08 அக்டோபர் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் இன்று காலை பொதுமக்கள் வழக்கம்போல் சாலைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் சிலர் மீது திடீரென பாய்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
Dogs


திருவாரூர், 08 அக்டோபர் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் இன்று காலை பொதுமக்கள் வழக்கம்போல் சாலைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் சிலர் மீது திடீரென பாய்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

பால் வாங்கச் சென்றவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக சாலையில் சென்றவர்களை நாய்கள் துரத்திக் கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாய்களின் தாக்குதலில் சிறுவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அடுத்தடுத்து பொதுமக்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் அச்சமான சூழல் நிலவியது.

நாய் கடியால் காயமடைந்தவர்கள் உடனடியாக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதில் பலத்த காயமடைந்த 7-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் அடுத்தடுத்து பொதுமக்களை நாய்கள் கடித்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் வெறிநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் நிரந்தர நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V