Enter your Email Address to subscribe to our newsletters

நாகர்கோவிலில், 08 அக்டோபர் (ஹி.ச.)
நாகர்கோவிலில்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து இன்று காலை கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
கைதி தப்பியதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தப்பியோடிய கைதியை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர். மருத்துவமனை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதி எந்த வழியாக தப்பிச் சென்றார், தப்பிச் செல்லும்போது யாருடைய உதவியாவது இருந்ததா என்பது உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. இதன் மூலம் கைதி தப்பிச் சென்ற நேரம் மற்றும் அவர் சென்ற பாதை குறித்து தகவல்களை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவலில் உள்ள கைதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தப்பிய சம்பவம் தொடர்பாக, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் கைதி தற்போது எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V