அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
புதுடெல்லி, 09 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் தவெக அரசு கடந்த மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அப்போது, அதிமுக கொறடாவின் உத்தரவுக்கு மாறாக, அக்கட்சியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக
Supreme court


புதுடெல்லி, 09 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் தவெக அரசு கடந்த மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

அப்போது, அதிமுக கொறடாவின் உத்தரவுக்கு மாறாக, அக்கட்சியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களில் நான்கு பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். எஞ்சிய 21 பேரும் தங்களது செயலுக்காக மன்னிப்புக் கோரி கடிதம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த 21 பேருக்கு எதிராக அளிக்கப்பட்ட தகுதி நீக்கக் கோரிக்கை மனுவைத் திரும்பப் பெறுவதாக அதிமுக தலைமை தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட சட்டப்பேரவைத் தலைவர், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளைக் கைவிடுவதாக உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் பி.வி. செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளைக் கைவிட்டது சட்ட விதிகளுக்கு முரணானது அல்ல என்ற அடிப்படையில் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, செல்வகுமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டது சட்டப்படி சரியானதா என்பது தொடர்பான விவகாரம் இந்த வழக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.

இருப்பினும், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவே இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும்.

Hindusthan Samachar / LOGESHWARI V