மேச்சேரி கோவில் எருமை மாடுகள் விற்பனை விவகாரம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, 09 அக்டோபர் (ஹி.ச.) சேலம் மாவட்டம், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் தானமாக வழங்கிய 200 எருமை மாடுகள் ரூ.83 லட்சத்துக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தி உரிய
Madurai


சென்னை, 09 அக்டோபர் (ஹி.ச.)

சேலம் மாவட்டம், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் தானமாக வழங்கிய 200 எருமை மாடுகள் ரூ.83 லட்சத்துக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட 200 எருமை மாடுகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், வங்கிக் கணக்கு முடக்கம் மற்றும் வசூல் நடவடிக்கைகளை எதிர்த்து துரைராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரருக்கு உரிய விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, மனுதாரரின் வங்கிக் கணக்கை முடக்கியதுடன், மேற்கொள்ளப்பட்ட வசூல் நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி, மனுதாரரிடம் விளக்கம் பெற்று, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அனுமதி அளித்தார்.

மேலும், கோவிலுக்குச் சொந்தமான 200 எருமை மாடுகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கோவில் செயல் அலுவலர் அஜாக்கிரதையாகச் செயல்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தி, தவறு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பக்தர்கள் கோவிலுக்குத் தானமாக வழங்கிய கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள இந்த விவகாரம், கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதிலும், அவற்றின் நிர்வாகத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படுவதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V