Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியின் தொன்மை, சங்க இலக்கியங்களின் செழுமை, தமிழர் பண்பாட்டின் பெருமை ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது தனது தலைமையிலான அதிமுக அரசுதான் எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதையொட்டி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வீரம், அறிவு, கலை, பண்பாடு, சமூக, கல்வி மற்றும் தொழில் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், உலக அரங்கில் தமிழ்நாடு மேலும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்காகத் தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளான அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என தமிழ்நாடு நாளில் உறுதியேற்குமாறும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P