ஊர்க்காவல் படை வீரர் அடித்துக் கொலை - அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.) அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது கொலை செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த
Anbumani


சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது கொலை செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஊர்க்காவல் படை வீரர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்ததுடன், உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனங்குறிச்சி பகுதியில், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களை ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் கண்டித்துள்ளார்.

அப்போது, அங்கிருந்து செல்லுமாறு அவர்களிடம் கூறியதாகத் தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், சிறிது நேரத்திற்குப் பிறகு காவல் நிலையம் அருகே வந்துள்ளனர்.

சுற்றுக்காவல் பணியை முடித்துவிட்டுத் திரும்பிய வெங்கடேசனை அவர்கள் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்களுடன் இணைந்து தனது கடமையைச் செய்து கொண்டிருந்த ஊர்க்காவல் படை வீரர், பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதற்காகக் கொல்லப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

உயிரிழந்த வெங்கடேசன் மாதம் ரூ.2,800 மட்டுமே ஊதியமாகப் பெற்று ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்ததாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது வெங்கடேசனும் உயிரிழந்ததால் அவர்களது இரு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, இந்தச் சம்பவத்தின் தீவிரத்தையும், பணியில் இருந்தபோது வெங்கடேசன் உயிரிழந்ததையும் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V