Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 01 நவம்பர் (ஹி.ச.)
ஒரே தனியார் நிறுவனத்திடம் இருந்து இரண்டரை ஆண்டுகளில் 40 வில்லாக்கள் மற்றும் குடில்கள் வாங்கப்பட்ட விவகாரத்தில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) மாநில முதல்வரின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவருக்கு நெருக்கமான அதிகாரியான கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிகர் அகர்வால் பங்கேற்றிருந்ததாகவும் குறிப்பிட்டார்
ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால், அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான பிரஷாகா மாத்தூர் மற்றும் குடும்பத்தினர் இணைந்து ஒரே நிறுவனத்திடமிருந்து 40 வில்லாக்கள் மற்றும் குடில்களை வாங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தச் சொத்துகள் சுமார் இரண்டரை ஆண்டுகளில் வாங்கப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு மற்றும் விற்பனை தொடர்பான விவரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்துப் பேசிய அசோக் கெலாட், குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒவ்வொரு வில்லாவும் ரூ.15 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகக் கூறியதைச் சுட்டிக்காட்டினார்.
இவ்வளவு குறைந்த விலையில் வில்லாக்கள் கிடைத்தால் அனைவருக்கும் வாங்க விருப்பம் இருக்கும் என விமர்சனமாகத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிட ஒதுக்கீட்டுக்காகக் காத்திருக்கும் நிலையில் (APO) வைக்கப்பட்டிருப்பதைத் தவிர, வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அசோக் கெலாட்டின் குற்றச்சாட்டாக உள்ளது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத்துறை (ED), வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
சம்பந்தப்பட்ட விவகாரத்தில் விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, ராஜஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவு இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு, விரிவான விசாரணைக்கு மாநில அரசின் அனுமதியையும் பெற்றுள்ளது.
தொடர்ந்து, நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பேரணியில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றும், டெல்லியில் அவர்களின் பங்கேற்பு முக்கியமான செய்தியை வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V