Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 நவம்பர் (ஹி.ச.)
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அருகே கார் ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.
தொடர்ந்து, சாலையின் இடதுபுறத்தில் இருந்த தடுப்புச் சுவரிலும் கார் மோதியுள்ளது.
இதனால், காருக்குப் பின்னால் வந்த ஆட்டோவும் இரண்டு இருசக்கர வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின.
எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னால் வந்த ஆட்டோவின் ஓட்டுநருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.
மேலும், பின்னால் வந்த இரண்டு இருசக்கர வாகனங்களின் ஓட்டுநர்களும் நிலைதடுமாறிக் கீழே விழுந்தனர்.விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காயமடைந்தவர்களை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.
இதற்கிடையே, விபத்து குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே. நகர் காவல்துறையினர், விபத்தில் தொடர்புடைய காரை ஓட்டியவர்கள் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதை அறிந்தனர். இதையடுத்து, அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாகக் கார் இயக்கப்பட்டதே விபத்துக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V