டெல்லியில் அமலுக்கு வந்த புதிய மாசு கட்டுப்பாட்டு விதிகள் - போலீசார் தீவிர சோதனை...!
புதுடெல்லி, 01 நவம்பர் (ஹி.ச.) டெல்லியில் குளிர்காலம் தொடங்கும்போது காற்றின் தரம் மோசமடைவது தொடர்ந்து வரும் பிரச்சினையாக உள்ளது. காற்றில் மாசுத் துகள்களின் அளவு அதிகரிப்பதால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்ற
Delhi


புதுடெல்லி, 01 நவம்பர் (ஹி.ச.)

டெல்லியில் குளிர்காலம் தொடங்கும்போது காற்றின் தரம் மோசமடைவது தொடர்ந்து வரும் பிரச்சினையாக உள்ளது. காற்றில் மாசுத் துகள்களின் அளவு அதிகரிப்பதால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.

டெல்லியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனங்களின் பதிவு எண்கள் அடையாளம் காணப்படுகின்றன.

இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் உள்ளதா என்பது சரிபார்க்கப்படுகிறது. சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை.

வாகனங்கள் வெளியிடும் புகையும் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரநிலையைப் பூர்த்தி செய்யாத குறிப்பிட்ட வாகனங்களுக்கு டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்டுள்ள பிஎஸ்-6 தரத்திற்குக் கீழான பெட்ரோல், டீசல் வாகனங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மற்றும் டிராக்டர்களும் இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

அதேவேளையில், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் பிஎஸ்-6 தரநிலையைப் பூர்த்தி செய்யும் கார்கள் தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்படுகின்றன.

புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில், டெல்லி போக்குவரத்து போலீசார் சிங்கு எல்லையில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி வாகனப் பதிவு எண் கண்டறியும் கேமராக்கள் மூலம் வாகனங்கள் அடையாளம் காணப்படுகின்றன.

விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், பிஎஸ்-6 தரநிலையைப் பூர்த்தி செய்யும் வாகனங்களாக இருந்தாலும், செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V