கவுகாத்தி – டெல்லி பயணம் இனி 8 மணி நேரத்திற்குள் -புல்லட் ரயில் திட்டம் குறித்து அசாம் முதல்வர் பெருமிதம்
அசாம், 01 நவம்பர் (ஹி.ச.) அசாம் மாநிலம் கவுகாத்தி வரை வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டிருப்பது வடகிழக்கு இந்தியாவின் போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரி
Asam cm


அசாம், 01 நவம்பர் (ஹி.ச.)

அசாம் மாநிலம் கவுகாத்தி வரை வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டிருப்பது வடகிழக்கு இந்தியாவின் போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக தான் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் வடக்கு புல்லட் ரயில் வழித்தடம் மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரத்துடன் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இதனை வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அசாம் அரசு கோரிக்கை விடுத்தது.

இதற்காக கடந்த ஜூலை மாதம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை அளித்ததுடன், அவரை நேரில் சந்தித்தும் பேசியதாக ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் அரசின் கோரிக்கையில் உள்ள முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட ரயில்வே அமைச்சர், புல்லட் ரயில் வழித்தடத்தை கவுகாத்தி வரை நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசின் செயல்பாட்டிற்கு இந்த முடிவு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் பாராட்டியுள்ளார்.

இந்த அதிவேக ரயில் இணைப்பு நடைமுறைக்கு வந்தால், கவுகாத்தியில் இருந்து டெல்லிக்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி மற்றும் இரண்டு மாநிலத் தலைநகரங்களுடன் விமானப் பயணத்திற்கு இணையான வேகத்தில், குறைந்த செலவில் போக்குவரத்து வசதி கிடைப்பது வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத் துறைகளை வளர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிவேக ரயில் போக்குவரத்து தொழில் முதலீடுகளை ஈர்க்க உதவும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் அசாமுக்கு புல்லட் ரயில் வரும் என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருந்ததாகவும், தற்போது அந்தக் கனவு நனவாகும் நிலையை எட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, இறுதியாக பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தைப் பாராட்டும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V