Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 01 நவம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, எதிர்பாராத விதமாக 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி தலைகுப்புற உருண்டு விழுந்ததுடன், அதில் ஏற்றப்பட்டிருந்த மரக்கட்டைகளும் சிதறி விழுந்தன. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வளர்ந்துள்ள மரங்கள் வெட்டப்பட்டு, லாரிகள் மூலம் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் சமவெளிப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இதற்காக அதிக பாரம் கொண்ட லாரிகள் மலைப்பாதைகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மற்ற வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், மரக்கட்டைகளின் அதிகப்படியான பாரம் காரணமாக லாரி திடீரென ஒருபுறமாகச் சாயத் தொடங்கியது.
இதையடுத்து ஓட்டுநரால் லாரியைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், சாலையோரத்தில் இருந்து சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் மரக்கட்டைகளுடன் லாரி உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மரக்கட்டைகள் பள்ளத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிதறி விழுந்தன.
லாரியும் தலைகுப்புறக் கவிழ்ந்து பலத்த சேதமடைந்தது. இருப்பினும், இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / LOGESHWARI V