Enter your Email Address to subscribe to our newsletters

பொன்னேரி, 01 நவம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சிங்கிளம்பேடு கிராமத்தில் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கடந்த மூன்று தலைமுறைகளாகப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாய்களை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கால்வாய்கள் மூடப்பட்டால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல வழியில்லாமல், வடக்கப்பட்டு, சிங்கிளம்பேடு, கொக்குமேடு, புலிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மழைக்காலங்களில் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து உபரிநீர் வெளியேறும் சூழலில், கால்வாய்கள் அடைக்கப்பட்டால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகும் நிலை ஏற்படலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கால்வாய்கள் மூடப்பட்டால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி, பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கால்வாய்கள் மூடப்படுவது தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கால்வாய்களை மூடுவதற்குப் பதிலாக அவற்றைத் தூர்வாரி, முறையாகப் பராமரித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மூன்று தலைமுறைகளாகப் பயன்பாட்டில் இருந்து வரும் உபரிநீர் கால்வாய்களை மூடும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
கால்வாய்களை மூடும் நடவடிக்கை தொடர்ந்தால், ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V