Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதாபுரம், 01 நவம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையிலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 'ஒன்றிணைவோம், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என்ற நோக்கத்துடன் இந்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற போட்டி, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் காவல் துறை சார்பு ஆய்வாளர் உலகநாதன் ஆகியோர் கொடியசைத்து மினி மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஓட்டம், பழைய பேருந்து நிலையம், பாரதி நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று டி. பிளாக் பகுதியில் நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓடினர். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
மினி மாரத்தான் போட்டியின் நிறைவில், போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆர்வத்தையும், ஒத்துழைப்பையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாராட்டினர்.
போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
Hindusthan Samachar / LOGESHWARI V