திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருச்செந்தூர், 01 நவம்பர் (ஹி.ச.) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க
Thiruchendur


திருச்செந்தூர், 01 நவம்பர் (ஹி.ச.)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் கோவில் வளாகம் முழுவதும் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.

தமிழகத்தின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப் பக்தர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.

இங்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், முதலில் திருச்செந்தூர் கடலில் புனித நீராடினர். பின்னர் கோவிலுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த உறவினர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

இதற்கிடையே, திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பனிமூட்டம் நிலவியது.

இதன் காரணமாக கோவில் வளாகம் முழுவதும் பனிப்படர்ந்து காணப்பட்டது. அதிகாலை நேரத்தில் நிலவிய இந்த இயற்கைச் சூழல் கோவில் பகுதியை ரம்மியமாகக் காட்சியளிக்கச் செய்தது.

Hindusthan Samachar / LOGESHWARI V