Enter your Email Address to subscribe to our newsletters

விஜயவாடா, 10 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான அன்னபரெட்டி விஜயபாஸ்கர் ரெட்டி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மேலும், முன்னாள் எம்.பி. விஜயசாயிரெட்டி தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியில் இணையப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயவாடாவில் நிருபர்களிடம் பேசிய அவர்,
ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் கடுமையாக உழைக்கும் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.
கட்சியில் முறையான உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை என்றும், கையெழுத்து இல்லாத கடிதத் தலைப்புகளில் பதவிகள் வழங்கப்படுவதாகவும் விமர்சித்தார்.
உழைப்புக்கு மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்காத இடத்தில் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.
மேலும், மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீணடித்துவிட்டதாகவும், கூட்டணி கட்சிகள் ஒன்றாக இருக்கும் வரை அவரால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் கூறினார்.
விஜயவாடாவில் வங்கவீட்டி ராதாவும், குண்டூரில் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றதற்கு வை.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்த சில மூத்த தலைவர்களே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, விஜயசாயிரெட்டி நாளை
(11-ந் தேதி) காலை 11.11 மணிக்கு விஜயவாடையில் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். இந்த நிலையில், அன்னபரெட்டி விஜயபாஸ்கர் ரெட்டி கட்சியில் இருந்து விலகி, விஜயசாயிரெட்டியின் புதிய கட்சியில் இணையப்போவதாக அறிவித்திருப்பது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA