Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 10 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாபில் நடைபெறும் பயிர்க்கழிவுகள் எரிப்பு முக்கியக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், டெல்லி அரசுக்கு எதிராகப் பஞ்சாப் மாநில அமைச்சர் பரிந்தர் குமார் கோயல் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாபில் நடைபெறும் பயிர்க்கழிவுகள் எரிப்பை மட்டுமே காரணமாகக் கூறுவது அரசியல் ரீதியான சாக்குப்போக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பரிந்தர் குமார் கோயல்,
டெல்லியில் இருப்பவர்கள் மாசுபாட்டுக்கு பஞ்சாப்தான் காரணம் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படாத காலங்களில்கூட, டெல்லியின் மாசுபாட்டுக்கு பஞ்சாப்தான் காரணம் எனக் குற்றம்சாட்டுகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், பஞ்சாபில் இருந்து வெளியேறும் புகை ஹரியானாவைக் கடந்து நேரடியாக டெல்லிக்குச் செல்வதாகக் கூறுவது எவ்வாறு சாத்தியம் எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் அதிகரித்து வரும் வாகனப் புகை மற்றும் தொழிற்சாலைகளின் மாசுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
நெல் அறுவடைக்குப் பிறகு பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுக்கவும், அவற்றை மாற்று முறைகளில் மேலாண்மை செய்யவும் பஞ்சாப் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததையடுத்து, பாஜக ஆளும் டெல்லி அரசுக்கும், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதே டெல்லி காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணம் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்குப் பஞ்சாப் அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P