Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 10 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா கொனிடேலா ஆகியோர் பிரிவதாக வெளியான அறிவிப்பு ஆந்திர அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
இதையடுத்து, ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் சமூக ஊடகப் பிரிவான ஐடிடிபி (iTDP), தனது நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளப் பொறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பவன் கல்யாண் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிடக் கூடாது என்றும், இதனை மீறி ஐடிடிபி சார்ந்த கணக்குகளில் பதிவுகள் வெளியானால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதேபோல், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தனது தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும், அது தொடர்பான பதிவுகளைப் பகிரவோ, சமூக வலைதள விவாதங்களில் பங்கேற்கவோ கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர்சி கட்சிகளுக்கு இடையே கடுமையான அரசியல் போட்டி நிலவி வரும் நிலையில், இரு கட்சிகளும் ஒரே விவகாரத்தில் தங்களது தொண்டர்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, பவன் கல்யாணும் அன்னா கொனிடேலாவும் 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தங்களது குழந்தைகளின் நலனே முதன்மையானது என்றும், தொடர்ந்து நல்ல நண்பர்களாகவும் பொறுப்பான பெற்றோர்களாகவும் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து, தனியுரிமையைப் பாதுகாக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P