Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் சவுரப் பரத்வாஜ், பாஜக தலைமையிலான மாநில அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தீபாவளி காலத்தில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் வைக்கோல் எரிப்பதே காரணம் எனக் கூறுவது தவறான தகவல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சவுரப் பரத்வாஜ்,
மத்திய அரசின் SAFAR இணையதளத்தில் டெல்லி காற்று மாசுபாட்டிற்கு வைக்கோல் எரிப்பால் ஏற்படும் புகையின் பங்களிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அந்தத் தரவுகளின்படி, தீபாவளிக்கு முந்தைய நாள் டெல்லியின் காற்று மாசுபாட்டில் வைக்கோல் எரிப்பின் பங்களிப்பு 5 சதவீதமாக இருந்ததாகவும், தீபாவளி நாளில் அது பூஜ்ஜியமாகப் பதிவானதாகவும் தெரிவித்தார்.
அந்த நாட்களில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து வீசிய காற்று பாகிஸ்தான் நோக்கிச் சென்றதால், அப்பகுதிகளில் வைக்கோல் எரிக்கப்பட்டிருந்தாலும் அதன் புகை டெல்லியை நோக்கி வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்ததாக அவர் விளக்கினார்.
எனவே, தீபாவளி கால காற்று மாசுபாட்டிற்கு வைக்கோல் எரிப்பைக் காரணமாகக் கூறி விவசாயிகள் மீது பழிபோடுவது தவறான அணுகுமுறை என்றும், பட்டாசுத் தொழில்துறையைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் சவுரப் பரத்வாஜ் விமர்சித்தார்.
இதற்கிடையே, டெல்லி அரசு இன்று தொடங்கியுள்ள 'நமோ யமுனா ரிவர் சஃபாரி' திட்டம் குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அப்பகுதியில் நடைபெற்று வந்த படகுச் சவாரி நடவடிக்கையைப் புதிய வளர்ச்சித் திட்டம் போல அரசு விளம்பரப்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். இதன் மூலம் யமுனை நதி சுத்தப்படுத்தப்பட்டுவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் கூறினார்.
டெல்லியில் காற்றும் சுத்தமாகவில்லை, யமுனை நதியும் சுத்தமாகவில்லை என விமர்சித்த அவர், காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக அரசு கூறும் நிலையில், காற்றுத் தரத்தைக் கண்காணிக்கும் சில நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், காற்றில் தண்ணீரைத் தெளிப்பதால் மட்டும் மாசுபாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும், உண்மையான மாசு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சவுரப் பரத்வாஜ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V