உத்தரகாண்ட் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு என்ன?- பிரதமர் மோடிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடிதம்!
உத்தரக்காண்ட், 10 நவம்பர் (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் தாமி, இமயமலை, கங்கை நதி, மாநிலத்தின் பாரம்பரியக் கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையுடன
Utk


உத்தரக்காண்ட், 10 நவம்பர் (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் தாமி,

இமயமலை, கங்கை நதி, மாநிலத்தின் பாரம்பரியக் கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையுடன் பிரதமருக்கு இருக்கும் நெருக்கத்தை அந்தச் செய்தி வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாநில மக்களின் சார்பாகவும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

தனிமாநிலக் கோரிக்கைக்காக நடைபெற்ற நீண்டகாலப் போராட்டத்தையும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பங்களிப்பையும் முதல்வர் நினைவுகூர்ந்துள்ளார்.

அவரது தொலைநோக்குப் பார்வையில் உருவான உத்தரகாண்டை வலிமையான, வளமான மற்றும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றும் முயற்சிகள் பிரதமர் மோடியின் தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வெளியிட்ட, '21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டு உத்தரகாண்டிற்கான பத்தாண்டாக இருக்கும்' என்ற அறிவிப்பு மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவத்தின்போது, பிரதமர் மோடி தொடர்ந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்து வழிகாட்டியதை முதல்வர் தனது கடிதத்தில் பாராட்டியுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி டேராடூனுக்கு வந்த பிரதமர் மோடி, பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக ரூ.1,200 கோடி நிதியுதவியையும் அறிவித்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகாண்டின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் சார் தாம் அனைத்து பருவநிலை சாலைத்திட்டம், ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில் திட்டம் மற்றும் டெல்லி - டேராடூன் பொருளாதார வழித்தடம் போன்ற முக்கியத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்கள் மலைப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், கல்வி, மருத்துவம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உதான் திட்டத்தின் மூலம் தொலைதூர மலைப்பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நீர், மின்சாரம் மற்றும் பாசனத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த லக்வார் பல்நோக்குத் திட்டத்திற்கு வேகம் அளிக்கப்பட்டதுடன், ஜம்ரானி அணைத் திட்டத்திற்கும் மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V