இந்தியாவின் நதிச் சுற்றுலாவில் புதிய மைல்கல்- 3,200 கி.மீ. உலகின் நீண்ட நதிப் பயணம் குறித்து மத்திய அமைச்சர் பெருமிதம்
புதுடெல்லி, 10 நவம்பர் (ஹி.ச.) இந்தியாவில் நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் சர்வதேச அளவில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார
Delhi


புதுடெல்லி, 10 நவம்பர் (ஹி.ச.)

இந்தியாவில் நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் சர்வதேச அளவில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக நீண்ட நதிக் கப்பல் பயணத்தை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சர்பானந்த சோனோவால்,

நதிக் கப்பல் சுற்றுலா என்றாலே ஐரோப்பாவையும், கடல் கப்பல் சுற்றுலா என்றால் அமெரிக்காவின் மியாமியையும் மக்கள் நினைவுகூரும் நிலை முன்பு இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகள் இருந்தபோதிலும், நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவது சாத்தியமற்றது என்ற எண்ணம் நிலவி வந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுமார் 3,200 கிலோமீட்டர் தூரம் பயணித்து 27 நதி அமைப்புகளைக் கடந்து செல்லும் உலகின் மிக நீண்ட நதிக் கப்பல் பயணத்தை இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

இந்தப் பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 பேர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்றதும் இந்தியாவின் சுற்றுலாத் துறைக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரம் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, டெல்லியில் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா அம்சமாக உருவாக்கப்பட்டுள்ள 'நமோ யமுனா ரிவர் சஃபாரி' திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியிலும் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் பங்கேற்றார்.

நீர் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், நீரின்றி எந்த உயிரினமும் வாழ முடியாது என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் அதன் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முன்முயற்சி எடுத்ததாகவும் தெரிவித்தார்.

டெல்லி அரசின் ஒத்துழைப்புடனும், உள்ளூர் மக்களின் ஆதரவுடனும் சோனியா விஹாரில் நடைபெற்ற நமோ யமுனா ரிவர் சஃபாரி நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதாகக் கூறினார்.

மேலும், நாட்டின் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் நதிச் சுற்றுலாவை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்த முயற்சி ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V