Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)
காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீ த லீடர் அமைப்பு தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அதில், மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மீனவர்களின் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு புதிய அணுகுமுறைகள் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நிரந்தர வாழ்வாதாரத் திட்டங்களையும் அரசு உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் ரூ.25 லட்சத்தை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், எஞ்சிய ரூ.25 லட்சத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாயைக் கொண்டு குடும்பத்தின் அன்றாடச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத் தேவைகளைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகள் உயர்கல்வி முடிக்கும் வரையிலான கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் வகையில் தனித்துவமான உதவித் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தொடர்ந்து பொருளாதார ஆதரவு கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V