GNA மின்சார ஒப்பந்தத்தில் முறைகேடா?- முதல்வர் மீது பி. ராஜீவ் சரமாரி குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், 10 நவம்பர் (ஹி.ச.) கேரள மாநில அரசின் GNA எனர்ஜி நிறுவனத்துடனான மின்சார ஒப்பந்தத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. ராஜீவ்
Kerala


திருவனந்தபுரம், 10 நவம்பர் (ஹி.ச.)

கேரள மாநில அரசின் GNA எனர்ஜி நிறுவனத்துடனான மின்சார ஒப்பந்தத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. ராஜீவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

GNA நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதில்லை என மாநில அரசு முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட பி. ராஜீவ், கேரளாவில் ஏற்கனவே தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருப்பதால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை அரசு தற்போது உணர்ந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், கடந்த அக்டோபர் மாதமே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட உத்தரவில், எந்தெந்த மாதங்களில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், எந்தெந்த வழிகளில் மின்சாரம் பெற முடியும் என்ற விவரங்கள் தெளிவாக இடம்பெற்றிருந்ததாக அவர் கூறினார்.

அந்தத் தகவல்களின் அடிப்படையில்தான் குறுகிய கால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து ஆவணங்களையும் முழுமையாகப் படித்த பிறகே முடிவுகளை எடுப்பதாக முதலமைச்சர் கூறி வருவதைச் சுட்டிக்காட்டிய பி. ராஜீவ், முந்தைய முதலமைச்சர் ஒவ்வொரு கோப்பையும் கவனமாக ஆய்வு செய்து முடிவெடுக்கும் நடைமுறையைக் கடைப்பிடித்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால், தற்போதைய முதலமைச்சர் அதிகாரிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை மட்டும் பார்த்து முடிவெடுப்பதில்லை என்ற வகையில் கருத்து தெரிவிப்பதாக விமர்சித்தார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவிலேயே மின்சாரக் கிடைப்புத் தொடர்பான முழு விவரங்களும் இருந்தபோது, மின்சாரப் பற்றாக்குறை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி GNA நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

அரசு சிக்கலில் மாட்டிக்கொண்ட பின்னரே ஒப்பந்தத்திலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் பி. ராஜீவ் குற்றம்சாட்டினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய சவாலை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு இந்த விவகாரத்தில் வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றார்.

மின்சாரத்துறை அமைச்சருக்கே இந்த விவகாரம் ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரியவந்ததா என்றும் கேள்வி எழுப்பிய அவர், ஒப்பந்தத்தில் யார் கையெழுத்திட்டது, அது எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது, இதன் பின்னணியில் தனிப்பட்ட அல்லது கூட்டு வணிக நலன்கள் இருந்தனவா என்பதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

GNA மின்சார ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்களும், அதன் பின்னணியில் உள்ள வணிக நோக்கங்களும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் பி. ராஜீவ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V