டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு முறைகேடு -விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் விக்னேஷ் உறுதி
சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண
Vignesh


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கு முக்கியமானதா என்ற கேள்வியை எழுப்பினார். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை வருமானம் அதிகரிப்பதைச் சாதனையாகக் கொண்டாடுவது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை சுமார் 53 முதல் 54 சதவீதம் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பழைய நடைமுறைகள் தொடர்ந்து வந்த சில பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் சரிசெய்யப்பட்டு மாநிலம் முழுவதும் சீரான முறையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிலர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க காவல்துறைக்கு எதிர்காலத்தில் கூடுதல் சுதந்திரம் வழங்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமளிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.

மேலும், 2024-ஆம் ஆண்டு ஒரே நாளில் 10 பேரும், 2025-ஆம் ஆண்டு ஒரே நாளில் 6 பேரும் உயிரிழந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், நடப்பு ஆண்டிலும் கொலைக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான மறுவாழ்வு மையங்களை அமைப்பதே அரசின் இலக்கு என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது சில பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வரும் இத்தகைய மையங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்வதில் சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளும் முறைகேடுகளும் ஏற்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V