Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 10 நவம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம்
நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம், பூசாரியூர், பணஞ்சாலை பகுதியில் தனியார் சர்வேயராகப் பணியாற்றும் விக்னேஷ் (30), தனது மனைவி சௌந்தர்யா மற்றும் ஒரு வயது மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டைப் பூட்டிவிட்டு, கந்திலி அருகே உள்ள அனுமன்பட்டி பகுதியில் வசிக்கும் சௌந்தர்யாவின் பாட்டி வீட்டிற்குக் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இதற்கிடையே, இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் விக்னேஷின் வீட்டுக் கதவு திறந்திருப்பதாக அவருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த விக்னேஷ், உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன.
வீட்டில் இருந்த லேப்டாப் பையில் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பையைத் திருடர்கள் கவனிக்காததால் நகையும் பணமும் தப்பின.
ஆனால், தனியாக வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்து ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் குழந்தைக்குச் சொந்தமான வெள்ளி, தங்க மோதிரங்கள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து விக்னேஷ் உடனடியாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஒடிசாவில் பணிபுரிபவரின் வீட்டிலும் கொள்ளை முயற்சி!
இதேபோல், ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஒடிசா மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார்.
குடும்பத்துடன் ஒடிசாவிலேயே வசித்து வருவதால், கிராமத்தில் உள்ள அவரது வீட்டை உறவினர்கள் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த வீட்டின் பூட்டையும் உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் விலைமதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்த அவர்கள், பீரோவில் இருந்த துணிமணிகளைச் சிதறடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
குறிப்பாக, இதே வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
ஒரே பகுதியில் அடுத்தடுத்து பூட்டிய வீடுகளைக் குறிவைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V