Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 11 நவம்பர் (ஹி.ச.)
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மொத்தம் 1,96,447 கேக்குகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கேக் வழங்கவும், மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்து மடல்களை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,680 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,87,055 மாணவ, மாணவியர்கள், 8,896 ஆசிரியர்கள் மற்றும் 496 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 1,96,447 பேருக்கு கேக்குகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 1,87,055 மாணவர்களுக்கு முதலமைச்சரின் வாழ்த்து மடல்களும் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு குழந்தைகள் தினம் பள்ளி விடுமுறை நாளில் வருவதால், அதற்கு முந்தைய நாளிலேயே கேக்குகள் மற்றும் வாழ்த்து மடல்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நவம்பர் 10-ம் தேதி அனைத்து கேக்குகளும் புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புதுக்கோட்டை வட்டக் கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டன.
அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 10 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகள் மூலம் கேக்குகள் பாதுகாப்பாகப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பள்ளிகளுக்குச் சென்று தலைமையாசிரியர்களிடம் கேக்குகள் மற்றும் வாழ்த்து மடல்களை ஒப்படைத்தனர்.
இதனை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். விராலிமலை ஒன்றியம், குளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். கேக்குகள் மற்றும் வாழ்த்து மடல்களைச் சுகாதாரமான முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 13-ம் தேதி முதலமைச்சர் கேக்குகள் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்திலும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ