Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 11 நவம்பர் (ஹி.ச.)
அசாம் மாநிலம் காம்ரூப் (மெட்ரோ) மாவட்டத்தில் உள்ள டிகாரு ரயில் நிலையத்தில் இன்று காலை கொல்கத்தா – சைராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயில் எண் 13125 கொண்ட இந்த ரயிலின் என்ஜின் மற்றும் ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.
இன்று காலை சுமார் 6.54 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ரயிலில் பயணித்த உணவுப் பெட்டியின் மேலாளர் கூறுகையில்,
அதிகாலை சுமார் 5 மணியளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், குவஹாத்தி வரை பயணம் சீராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
குவஹாத்தியில் ரயில் நின்று மீண்டும் புறப்பட்டுச் சென்றது. டிகாரு ரயில் நிலையத்தை நெருங்கியபோது ரயிலின் வேகம் குறைந்தது.
நடைமேடையைக் கடந்தபோது திடீரெனப் பெரிய சத்தம் கேட்டது. சில மீட்டர் தூரத்திலேயே ரயிலின் என்ஜின் தடம் புரண்டதை உணர்ந்தேன்.
தடம் புரண்ட நிலையிலேயே ரயில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நகர்ந்தது. இதனால் நான் இருக்கையிலிருந்து மூன்று முறை கீழே விழுந்தேன்.
ரயிலின் கதவையும் திறக்க முடியவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் ரயில் முழுமையாக நின்றது. தெய்வத்தின் அருளால் அனைவரும் உயிர் தப்பினோம்.
இல்லையெனில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். தற்போது என்ஜின் மற்றும் பவர் கார் முற்றிலும் சேதமடைந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் முதற்கட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது இலக்கைச் சென்றடைவதற்காக மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V